கேரளாவில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல், ஹிந்தியை பிறகு கற்றுக் கொள்ளலாம், முதலில் பக்கத்து மாநிலத்தில் பேசும் மொழியை கற்றுகொள்ளுங்கள் என பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
36 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கமல் - மணிரத்னம்
36 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் கமலஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ஒரு படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் கமலுடன் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன. படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமலஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் சாதனையை ‘தக் லைஃப்’ டிரைலர் முறியடித்துள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா வெளியாகி யூடியூப் வலைத்தள பக்கத்தில் 4 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 24-ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான் லைவ் பர்ஃபார்மன்ஸ் செய்வார் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி குறித்து கேரளாவில் கமல் பேச்சு
படம் வெளியாக சில தினங்களே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. ‘நாயகன்’ படத்திற்குப் பின்னர் கமல் மணிரத்னம் இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. தற்போது கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் புரோமோஷனில் பேசிய கமல், “ஹிந்தியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் அனைவரும் அண்டை மாநிலங்களில் பேசுகின்ற மொழியை கற்றுக் கொள்ளுங்கள். நம் மொழி அழிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. நாம் அனைவருமே திராவிடர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்” என பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
