உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்டண்ட் காட்சி உள்பட அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்து அசத்தினார் திரிஷா.  தற்போது 'கர்ஜனை' என்ற படத்திலும் அதே போன்ற சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த இன்னொரு படத்தின் டைட்டிலான 'கர்ஜனை' படத்தில் திரிஷா, டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் உதவியுடன் நடித்துள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

மது என்ற மேற்கத்திய நடனக்கலைஞராக திரிஷா இந்த படத்தில் நடித்திருப்பதாகவும், அவர் கொடைக்கானலுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது ஒரு மிகப்பெரிய சிக்கலில் சிக்கி கொள்வதாகவும், அந்த சிக்கல் என்ன? அந்த சிக்கலில் இருந்து அவர் விடுபட்டாரா? என்பது தான் கதை என்றும் இயக்குனர் சுந்தர்பாலு தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் திரிஷாவின் அறிமுக காட்சியே சண்டைக்காட்சிதான் என்றும், மாஸ் நடிகர்களுக்கு இணையாக அவர் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளது திரையில் பார்க்கும்போது ஆச்சரியப்பட வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.