வரும் மே மாதம் 4ம் தேதியன்று 36 வயது பூர்த்தியாகி 37ல் காலடி எடுத்துவைக்க இருக்கும் நடிகை த்ரிஷா தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கடந்த பத்து ஆண்டுகாலமாகச் சந்தித்துவரும் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

’99ம் ஆண்டு ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, 2002ல் ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா கடந்த 16 வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவர்கள் பிரிந்து சேர்ந்து மீண்டும் பிரிந்து அடுத்தும் பிரிந்து சேர்ந்து இருந்தனர்.

அதன்பின் அவர் தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் திருமணம் நின்றுவிட்டது. வருண் மணியன் உடனே மறுமணம் செய்துகொள்ள த்ரிஷா மட்டும் ‘96 பட விஜய் சேதுபதி போல் இன்னும் ஒண்டிக்கட்டையாகவே இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது திருமணம் பற்றி ஒரு பேட்டியில் த்ரிஷா மனம் திறந்து பேசியுள்ளார். "இப்போதைக்கு நான் எந்த முடிவு எடுக்கும் நிலையிலும் இல்லை. வாழ்க்கைத் துணைக்கு சரியான ஒரு நபரை மனம் தேடவே செய்கிறது. அந்த நபர் சரியானவராக நேர்மையானவராக இருக்கவேண்டும். அப்படி ஒருவர் தென்பட்டால் அடுத்த நாளே அவரைத் திருமணம் செய்துகொள்ளத் தயார்’என்கிறார் த்ரிஷா.

அந்த சரியான நேர்மையான நபராக நீங்க ஏன் இருக்கக்கூடாது பாஸ்?