'சதுரங்க வேட்டை' புகழ் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளியான " தீரன் அதிகாரம் ஒன்று" படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . 

படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வாழ்த்துக்களும் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் படக்குழு மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், இப்படத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் குற்றப்பரம்பரை என்னும் சொல்லுக்காக மன்னிப்பு கேட்பதோடு , சம்பந்தப் பட்ட காட்சிகளையும் நீக்கம் செய்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கடிதத்திற்கு காரணம் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் குற்றப் பரம்பரை என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் இழிவாகக் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 'குற்றப் பரம்பரை' எனும் சொல்லைப் பயன்படுத்தும் காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளது படக்குழு .

இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவிய கொள்ளைச் சம்பவங்களையே இந்தப் படம் பேசுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சித்திரிக்கவில்லை. இருப்பினும் மக்கள் மனது புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால் அதற்காக 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுடன் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பில் இருந்து  குற்றப் பரம்பரை எனும் சொல் மற்றும் அது சம்பந்தபட்ட  காட்சிகள்  நீக்கப்படும் எனவும் படக்குழு  தெரிவித்துள்ளது.