நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தின்  அகில இந்திய தலைவராக திருடா திருடி திரைப்படத்தின் இயக்குனர் சுப்ரமணியம் சிவாவை நியமித்துள்ளார்.   திரையுலகில் பிசியாக இருந்தாலும் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலும் தற்போது தனுஷ் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார். காரணம் அவரது மாமனார் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளது தான். மாமனார் ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு அதனுடன் இணைந்து செயல்பட தனது ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் வேலையில் தனுஷ் இறங்கியுள்ளார்.  இதன் ஒரு கட்டமாக தனது ரசிகர் மன்றத்திற்கு அகில இந்திய தலைவராக இயக்குனர் சுப்ரமணியம் சிவாவை நியமித்துள்ளார். நடிகர் தனுஷ் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப் படம் என்றால் அது திருடா திருடி தான். அதுநாள் வரை காதல் தோல்வியால் தவிக்கும் நடிகராக மட்டுமே நடிக்க வந்தவரை கலகலப்பான நம்ம வீட்டுப் பையனாக காட்டிய படம் திருடா திருடி. அந்த படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பியது. நடிகர் தனுசுக்கு ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டதும் திருடா திருடி படத்திற்கு பிறகு தான். தனுஷை திரையுலகில் முன்னணி நடிகராக்கிய சுப்ரமணியம் சிவா அரசியல் ரீதியாகவும் உதவுவார் என்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள். அதே சமயம் மாமனார் கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில் அவரது மருமகன் ரசிகர் மன்றத்தை பலப்படுத்துவது குடும்ப அரசியலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.   ஆனால் தனுஷ் ஏற்கனவே மேடைகளில் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். முன்பெல்லாம் மேடையில் பேசும் போது சுருக்கமாக பேசிவிட்டு கீழே இறங்கும் பழக்கம் கொண்டவர் தனுஷ். ஆனால் காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, சீமான் போன்றோரை எல்லாம் கிழித்து தொங்கவிட்டார் தனுஷ். இதே போல விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசும் போதும், தனது மாமனாருக்கு ஆதரவாகவும், அவரை எதிர்ப்பவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையிலும் தனுஷ் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது திடீரென ரசிகர் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து மன்ற நடவடிக்கைகளை தனுஷ் தீவிரமாக்க உள்ளது அரசியல் கணக்கு என்றே கருதப்படுகிறது. மேலும் இதுநாள் வரை மன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த தனுஷ் இனி நலத்திட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கலந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.