ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடந்த போராட்டத்தை தமிழர்களால் அத்தனை எளிதாக மறந்திட முடியாது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான போராட்டம் என்றால் அது மெரினா போராட்டம் தான். இந்த போராட்டத்தை மையமாக வைத்து தான் மெரினா புரட்சி என்ற பெயரில் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் ஒரு திரைப்படத்தினை இயக்கி வருகிறார். 

இந்த படம் குறித்து பேசும் போது , மெரினா புரட்சி படம் ஒரு புலனாய்வு ஆவணம் போன்றது. இந்த மெரினா போராட்டத்திற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் யார் இருக்கின்றனர் என பல ரகசியங்கள் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு தெரியவரும். இந்த திரைப்படம் வெளிவரும்போது பல தமிழ் பிரபலங்களின் முகத்திரையும் கிழியப்போகிறது. இந்த படத்திற்காக் பின்னணியில் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறோம். 

இந்த ஆராய்ச்சியின் முடிவில் வெளியான உண்மைகளை கண்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.
அதே அதிர்ச்சியை மக்களும் படம் பார்க்கும் போது அடைவார்கள் என தெரிவித்திருக்கும் எம்.எஸ்.ராஜ், மெரினா போராட்டத்துக்கு காரணம் முதலில் அங்கு அமர்ந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்த 18 பேர் தான். இந்த 18 பேருமே இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மட்டுமல்ல், உண்மையில் இந்த அனைத்திற்கும் பின்னணியில் இருந்தது மூன்று தமிழர்கள் தான். அதில் ஒரு முன்னணி தமிழ் நடிகைக்கும் பங்கு உண்டு. ஆனால் அது எல்லோரும் நினைப்பது போல திரிஷா அல்ல. உண்மை வெளிவரும் போது எல்லோருமே அதை அறிவீர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். 

தமிழ் திரையுலகில் இருக்கும் தமிழ் நடிகை என்று அவர் தெரிவித்திருப்பதால், யார் அந்த நடிகை? அவருக்கும் இந்த போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என மிகப்பெரிய அளவிலான் கேள்விக்குறி இப்போது தோன்றி இருக்கிறது. இதனால் மெரீனா புரட்சி படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.