தமிழ்சமூகத்தின் ஒரே காவலாளி என்ற எண்ணத்துடன் ‘ஏங்க என்னங்க நடக்குது இங்கே? என்று அவ்வப்போது சவுண்டு விட்டு வரும் முன்னாள் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் இன்று பத்திரிகையாளர்களுக்கு  எதிராகப் பெருங்குரலெடுத்து கூவியிருக்கிறார்.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளான டிசம்பர் 11ம் தேதியை  மொத்தமாக மறந்துவிட்டு, அதே ஊடகங்கள்  ரஜினி பிறந்தநாளை 24மணிநேரமும் கொத்துபரோட்டா போட்டுக்கொண்டிருப்பதே தங்கரின் ஆத்திரத்துக்குக் காரணம். இதோ தங்கரின் கொந்தளிப்பான வார்த்தைகள்...மானே தேனே மாதிரி நடு நடுவே ‘ஏங்க என்னங்க நடக்குது இங்கே? போட்டுக்கொண்டு படித்தால் தங்கர் பச்சான் தென்படுவார்.

...இவர்கள் என்றைக்கு திருந்துவார்கள்?

நேற்று பெருங்கவி பாரதியாரின் பிறந்தநாள் என்பதை ஒன்றிரண்டைத்தவிர பெரும்பாலான  ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. 

இன்று நடிகர்  ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவரைப்பற்றிய செய்திகளும்,  திரைப்படங்களும், காட்சிகளும்  வெளியிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. 

இப்படிப்பட்ட ஊடகங்களை வைத்துக்கொண்டு இந்த நாட்டை எப்படி  காப்பாற்றுவது? இவர்கள்தான் நாட்டை காக்கும் நான்கு தூண்களில் ஒன்று என இனியும் சொல்லிக்கொள்ளலாமா?

நேர்மையான ஊடகங்கள் மட்டும் நமக்கு அமைந்தால்  நல்ல நல்ல  தலைவர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்!

தங்கர்பச்சான்.

பின்குறிப்பு; இந்தச்செய்தியிலும் பாரதியார் படம் இருட்டடிப்பா என்று தங்கர் கோபித்துக்கொள்வாரே என்பதற்காக அச்சு அசலான பாரதியாரின் படத்தை வெளியிட்டிருக்கிறோம்.