லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆண்ட்ரியா,சாந்தனு, கெளரி கிஷன், கைதி புகழ் அருண் தாஸ், தீனா, விஜே ரம்யா, ஸ்ரீமன் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீயாய் நடைபெற்று வருகின்றன. 

ஏப்ரல் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து நேற்று வெளியான வாத்தி கம்மிங் செகண்ட் சிங் சாங் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் 7வது இடம் பிடித்து பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெற உள்ள இந்த விழாவை சன் டி.வி. நேரலை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 10 சதவீத டி.டி.எஸ். வரியை ரத்து செய்யாவிட்டால் மார்ச் 27 முதல் புதிய படங்களை விநியோகிக்க மாட்டோம் என விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். ஒருவேலை இந்த போராட்டம் ஏப்ரல் 9ம் தேதி வரை நீடித்தால் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

ஒரு வேலை அப்படி நடக்காமல் போராட்டம் இடையில் வாபஸ் பெறப்பட்டு படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆனாலும், கொரோனா என்ற அரக்கனிடம் இருந்து தப்பிக்க வேண்டும். ஏனென்றால் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

அதனால் தான் மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்கஷன் கூட ரசிகர்கள் இல்லாமல் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கொரோனா பரவுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளாவில் வரும் மார்ச் 31ம் தேதி வரை தியேட்டர்கள் மூடப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதேபோல கொரோனா பாதுகாப்பிற்காக  தமிழகத்திலும் தியேட்டர்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால், மாஸ்டர் படத்திற்கு அது மிகப்பெரிய சோதனையாக வந்து அமையும். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின் போது ஐ.டி. ரெய்டு, விசாரணை என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தளபதி விஜய், இதை எப்படித்தான் சமாளிக்க போகிறார் என்று தெரியவில்லை. இருப்பினும் இரண்டு தடைகளையும் மீறி மாஸ்டர் படம் வெற்றிகரமாக திரைக்கு வர வேண்டுமென ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.