தனது இரண்டாவது நீண்ட ஷெட்யூலுக்காக டெல்லி சென்ற ‘தளபதி 64’படக்குழு மாசு, மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்து முடியாமல் முடங்கியுள்ளதாக அக்குழுவைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் வீணாகிவருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு கடந்த வாரம் டெல்லியில் துவங்கியது. சுமார் 40 முதல் 50 நாட்கள் வரை நடைபெறுவதாக இருந்த இந்த நீண்ட ஷெட்யூலில் விஜய் சேதுபதியின் போர்ஷன்களும் அதிக அளவில் படமாக்கப்பட உள்ளன. தவிர ஒரு கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதிகம் எடுக்கப்படவிருப்பதால் டெல்லியின் புகழ்பெற்ற எஸ்.ஆர்.சி.சி.கல்லூரியிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால் டெல்லியின் காற்றில் முன்னெப்போதையும் விட கடுமையான மாசு கலந்திருப்பதாலும் தொடர்ந்த பனிப்பொழிவின் காரணமாகவும் ‘தளபதி 64’படக்குழுவால் திட்டமிட்டபடி எங்குமே படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். சும்மா ஒப்பேத்துவதற்காக ஒன்றிரண்டு இன் டோர் காட்சிகளை மட்டும் எடுத்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் சோம்பல் முறித்து வருகிறதாம் படக்குழு. உறவினர் படம் என்பதால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விஜய் கால்ஷீட் தரத் தயாராக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் வீணாகிறதே என்ற கவலையில் இருக்கிறதாம் இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பு.