மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் படமாக எடுத்து வருகிறார். அதற்கு தலைவி என பெயரிடப்பட்டுள்ளது. அதில் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக ப்ரியாமணியும் நடிக்க உள்ளனர். 

இதனிடையே எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைவி படத்தில்  எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரண்டு லுக்கிலும் பார்ப்பதற்கு அச்சு அசலாக எம்.ஜி.ஆராக மாறியுள்ள அரவிந்த் சாமியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத்தின் தோற்றம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஜெயலலிதாவின் உருவத்தோடு கொஞ்சமும் பொருந்தாததால் கங்கனாவை நெட்டிசன்களும், மீம்ஸ் கிரியேட்டர்ஸும் மரண கலாய், கலாய்த்தனர். 

இந்நிலையில் ஜெயலலிதா விஷயத்தில் செய்த தவறை சரி கட்டும் விதமாக எம்.ஜி.ஆர். தோற்றத்தை அரவிந்த் சாமியை வைத்து அணு, அணுவாக செதுக்கியுள்ளனர். இதையடுத்து தலைவி ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.