அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, ‘அஜித் 60’படம் வரும்  ஆகஸ்ட் மாதமே  பூஜையுடன் தொடங்கவுள்ளதாக தந்து ட்விட்டர் பக்கத்தில்  அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்  போனி கபூர். இம்முறை ஓய்வு எதுவும் எடுக்காமல் அஜீத் அடுத்த படத்துக்கு உடனே தயாராகியிருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வருடத்தின் பொங்கல் அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம், அவரது படங்களிலேயே  அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அஜித் நடித்து வந்த நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்திருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வ அறிவிப்பொன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

“ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸை நோக்கி பணியாற்றிய #NerkondaPaarvai இன் மொத்த யூனிட்டுக்கும் மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அடுத்த படமாக AK60ஐ அஜித் குமார், ஹெச்.வினோத்துடன் அறிவிப்பதில் மகிழ்ச்சி” என போனி கபூர் பதிவிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் அஜித் நடிக்கவுள்ளார் என முன்னரே செய்திகள் வெளியாகி வந்தாலும், தற்போதுதான் அதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.’ பிங்க்’ படத்தின் ரீமேக்கான ’நேர்கொண்ட பார்வை’யில் அஜீத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத நிலையில், வினோத் அடுத்த படத்தில் முழுக்க முழுக்க அஜீத் மட்டுமே கலக்கும் ஆக்‌ஷன் படமாக இயக்க உள்ளார் என்று தெரிகிறது.