கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'முஃப்தி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட உள்ள திரைப்படம் 'பத்து தல' . இந்த படத்தில் முதல் முறையாக சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். தற்போது இந்த படத்தில் தனுஷின் ரீல் மகன், டீஜே இணைந்துள்ளதாக அவரது பிறந்தநாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடித்து முடித்துள்ள 'ஈஸ்வரன்' திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு... ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, மாநாடு, பத்து தல, என அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வருகிறார். எனவே சிம்புவின் ரசிகர்களும் உச்சகத்தில் உள்ளனர்.

விரைவில் துவங்க உள்ள 'பத்து தல'  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிகை பிரியாபவானிசங்கர் நடிக்க உள்ளார் என்பதை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதை தொடர்ந்து, டீஜே அருணாசலத்தின் பிறந்தநாளான இன்று அவருடைய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளது படக்குழு.

இவர் ஏற்கனவே, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தில், தனுஷின் மகனாக நடித்திருந்தார். சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், உருவாகும் 'பத்து தல' படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தை  ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.