சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. அங்கு 3,245 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. அதேபோல் மால்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், அருட்காட்சியம், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் சோதனை ஓட்டமாக நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழகம் முழுவதும் இதுவரை 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 19ம் தேதி முதலே அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகிற்கு மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க வேண்டும் என்றால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் முதலமைச்சர் எடப்பாடியாரின் அறிவுறுத்தலின் படி மார்ச் 30ம் தேதி வரை உறுப்பினர்கள் யாரும் சங்கத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பொதுச்செயலாளர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.