கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி ஷூட்டிங்கிற்கு அனுமதி கொடுத்தாலும் தியேட்டர்களை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்காததால் பெரும்பாலான படங்களை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கனவே “பொன்மகள் வந்தாள்”, “பெண் குயின்” படங்களால் பற்றி எரிந்த பிரச்சனைக்கு பெட்ரோல் ஊற்றியது போல் “சூரரைப்போற்று” படமும் ஆன்லைனில் வெளியாகிறது. இதனால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. 

இந்நிலையில் பாரதிராஜா புதிதாக தொடங்கியுள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. சிறிய தொகை முதல் 70 கோடி வரை ஷேர் வரும் படங்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகவும், இனிவரும் காலத்தில் இதுபோல் வருமா என்பது இயலாத காரியம் என்றும்,  திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் எங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்றும் கூறி திரையரங்கு உரிமையாளர்களுக்கு 6 கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். அவை, 

கடந்த 10 வருடங்களாக கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் செலுத்தி வருகிறோம். இனி அக்கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது.

வருமானப் பகிர்வில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். விரைவில் நாம் கூட்டாகப் பேசி திரையரங்குகள் திறக்கும் முன்பு முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பட்ஜெட் படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தி நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். 

திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்தில் கிடைக்கும் வருவாயில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பங்கு தேவை. 

ஆன்லைன் டிக்கெட் முறையில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும். 

ஹோல்டு ஓவர் முறையை யாரும் பின்பற்றுவதில்லை நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களை திடீரென்று நிறுத்துவதும், தரமான படங்களுக்கு சரியான வாய்ப்பும் மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது

confirmation முறையில் நடத்தப்படும் திரையரங்குகளில் எங்களது படங்களைத் திரையிட இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.