நடிகர் சத்யராஜின் தாயாருக்கு இறுதிச்சடங்கு எப்போது? குடும்பத்தினர் கூறிய தகவல்..!
பிரபல நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் நேற்று உயிரிழந்த நிலையில், இவரின் இறுதி சடங்குகள் நாளைய தினம் நடைபெற உள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
94 வயதான நடிகர் சத்யராஜின் தாயார், வயது மூப்பு மற்றும் இருதய நோய் காரணமாக கோவை பந்தையசாலை பகுதியிலுள்ள கே.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 3.50 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கோவை பந்தையசாலை பகுதியிலுள்ள,சத்தியராஜ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாய் உயிரிழந்த செய்தியறிந்து, ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் , தனது மகன் சிபிராஜூடன் இரவு 9 மணி அளவில் கோவை வந்தார். சத்யராஜின் தங்கை வெளிநாட்டில் இருப்பதால், அவர் வந்த பின்னரே, இறுதி சடங்கு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இறுதி சடங்கு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தயாராக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ..! எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
உயிரிழந்த நாதாம்பாளுக்கு சத்யராஜ் ஒரே மகனாவார். கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கல்பனா சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். சத்யராஜின் தாயார் உயிரிழந்ததை அறிந்து, முதலமைச்சர் ஸ்டாலின், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் இரங்கல்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.