பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 6 மாதமாகவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தனது தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கூட பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் நல்ல நிலைக்கு வளர்ந்து வந்த சுஷாந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டதை அவருடைய ரசிகர்களால் இதுவரை ஜீரணிக்கமுடியவில்லை. இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் ரசிகர்களை கொதிப்படையச் செய்கிறது. 

 

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

 

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தி, முன்னாள் பிசினஸ் மேனேஜர், மகேஷ் ஷெட்டி, சஞ்சனா சங்கி, தயாரிப்பாளர் முகேஷ் சாப்ரா, பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மா, உறவினர்கள், உடன் தங்கியிருந்தவர்கள் என இதுவரை 41 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார். அவர்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். 

 

இந்நிலையில் பிரபல கதையாசிரியரும், இயக்குநருமான ஜெஃப்ரி போலீசாரிடம் கூறியுள்ள தகவல்கள் புது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அதாவது ஜூன் 12ம் தேதி சுஷாந்துடன் ஜெஃப்ரி போனில் பேசியுள்ளார். அப்போது அவர் மற்றொரு நடிகர் மூலமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதை தன்னால் புரிந்து கொள்ள முடிந்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் நடைபெறும் பார்ட்டிகள் மற்றும் விருது விழாக்களில் இருந்தும் சுஷாந்த் சிங் ராஜ்புட புறக்கணிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் தான் சுஷாந்த் அதிக அளவிலான மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.