‘சூரரைப் போற்று’என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, மிகவும் சூரத்தனமாக பொங்கலன்று வெளியாகும் ரஜினியின் ‘தர்பார்’படத்துடன் மோத முடிவெடுத்திருக்கிறார்கள்  இயக்குநர் சுதா கொங்குராவும் நடிகர் சூர்யாவும்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்கா ஆகியோரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் சூரரைப் போற்று’.சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.

இப்படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். முதலில் இப்படம் 2029 கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.

2020 பொங்கலன்று அதுவும் ரஜினி படமான தரபாருடன் மோத முடிவெடுத்திருக்கிறார்களாம். பொங்கலை ஒட்டி ஏகப்பட்ட விடுமுறை நாட்கள் வருவது ஒருபுறமிருக்க, தன்னிடமிருந்த இயக்குநர் சிவாவைத் தள்ளிக்கொண்டு போனதால் மிகவும் அப்செட்டில் இருந்த சூர்யாவும் இந்த முடிவுக்கு ஒரு காரணமாம். இதே தேதியில்தான் தனுஷின் ‘பட்டாஸ்’படமும் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் பொங்கல் ரிலீஸ் இப்போதே சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.