சூர்யாவுக்கு இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையில் கடும் மனஸ்தாபம் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் ‘என்.ஜி.கே’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘அவரது அடுத்த படத்திலும் நாயகனாக நடிக்க நான் தயார்’ என்று மேடையில் அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.

சூர்யாவின் படங்கள் தொடங்கிய 6 மாதங்களுக்குள்ளேயே ரிலீஸாகி வந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த ‘நந்தகோபாலன் குமாரன்’ என்கிற ‘என்.ஜி.கே’ ஒரு வருடத்திற்கும் மேலாய் இழுத்தது. இதனால் சூர்யா செல்வராகவன் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த ‘என்ஜிகே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய  சூர்யா , ‘செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி மறுநாள் இருக்காது. செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார். என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவன் அடுத்த படம் எடுத்தால் நானே கதாநாயகனாக நடிக்க விருப்பம்’என்று உருக்கமாகப் பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.