கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் படிப்பதற்கான உதவி செய்து வருகிறார். இந்நிலையில் அநத் அமைப்பின் சார்பில் வித்தியாசம்தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. 

இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகர்  சூர்யா, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் நிறுவனர் நாகராஜ் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில்,பேசிய  தஞ்சாவூரைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகள் பற்றிப் பேசினார். அகரம் அறக்கட்டளை மூலம் தான் எப்படி படித்து முன்னேறினேன் என்றும் கூறினார்.

கிணறு வெட்டும் கூலித் தொழிலாளியின் மகளான காயத்ரி, தனது தந்தை புற்றுநோயால் இறந்தது பற்றியும், குடிசை வீட்டில் வசித்தது குறித்தும், கல்லூரி படிக்க வைக்க வசதியில்லாத குடும்பத்தில் பிறந்த தனக்கு அகரம் அறக்கட்டளை உதவியது பற்றியும் பேசினார். கிராமத்திலிருந்து வந்ததால், தன்னை ஏளனமாகப் பார்த்தனர், அவர்களிடம் என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே பி.ஏ ஆங்கிலம் எடுத்துப் படித்தேன் என்றார்.

அவரது உருக்கமான பேச்சைகை கேட்ட நடிகர் சூர்யா மேடையிலேயே கண்ணீர் விட்டு  அழுதார். ஒரு கட்டத்தில் எழுந்து சென்று பேசிக் கொண்டிருந்த மாணவியை அருகில் சென்று தேற்றினார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது.

 

இதைத் தொடர்ந்து பேசிய சூர்யா, “என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்குத் திருப்பி உதவும் முயற்சியாகவே அகரம் அறக்கட்டளை ஆரம்பித்தோம். அதன் மூலமாக 2,500 மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அடுத்தகட்டமாக இணை என்கிற திட்டத்தைத் தொடங்கி முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.