இயக்குனர் கே.வி.ஆனந்த் சூர்யாவை வைத்து இயக்கி, ஏற்கனவே 'அயன்', 'மாற்றான்' ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மூன்றாவது முறையாக மற்றொரு படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன், லண்டனில் துவங்கியது. 

இதில் லைகா குழுமத்தில் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா, பிரேமா சுபாஷ்கரன், கதாநாயகன் சூர்யா, கதாநாயகி சாயிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தற்போது முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து அவருடைய 37-வது படத்தை தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், சமுத்திர கனி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்றும், ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜனும், கலை இயக்குனராக ஹெலனும் பணியாற்ற உள்ளனர்.

ஏற்கனவே கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா கூட்டணி வெற்றி கூட்டணி என ரசிகர்களால் அறியப்பட்ட நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மிகவும் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட நான்கு  மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

ஏற்கனவே 'கத்தி' திரைப்படம் வெளியான போது, ராஜ பக்சேவின் பினாமி நிறுவனம் என்று சர்ச்சையில் சிக்கிய லைகா நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. பின் இதைத்தொடர்ந்து சமீபத்தில், புதிய படங்களை ஆன்லைனில் வெளியிடும் 'தமிழ் ராக்கர்ஸ்' நிறுவனம் லைகாவின் கீழ் தான் இயக்குகிறது என சர்ச்சை வெடித்தது. இந்த தகவலையும் லைகா நிறுவனம் முழுமையாக மறுத்தனர். எனினும் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வரும் லைகா நிறுவனத்தில் தற்போது சூர்யா தன்னுடைய 37 வது படத்தை நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.