ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நடிகர் செந்திலின் சொந்த ஊரான இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானகரவேல். மதுரை, அருளானந்தல் கல்லூரியில் பி.எஸ்சி, அடுத்து எம்.சி.ஏ முடித்து விட்டு ஐஏஎஸ் பயிற்சி பெற சென்னை வந்துள்ளார். பயிற்சி பெற்று வந்த அவரிடம் அவருக்குள்ள கவிதை ஞானங்களை அறிந்த்து அவரது நண்பர்கள் பாடலாசிரியர் ஆசையை விதைத்திருக்கிறார்கள்.

 

’பூமியை சுமந்த புல்வெளி’ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கவிதை புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவரது நண்பர்கள் சினிமா அலுவலங்களுக்கு போய் கொடுத்திருக்கிறார்கள்.  அவரது நண்பர் இசையமைப்பாளர் தாஜ்நூரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  அப்படியே தொடர்புகள் தொடர, தாஜ்நூர் இசையமைத்த சில விளம்பரப்படங்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறார் ஞானகரவேல். அடுத்து தாஜ்நூர்  இசையமைத்து வெளியிட்ட இஸ்லாம் என்கிற ஆல்பத்தில் இடம்பெற்ற  10 பாடல்களில் 7 பாடல்களை எழுதி இருக்கிறார் ஞானகரவேல்.

 

பிடித்துப்போக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தில் பாடலாசிரியராக்கி இருக்கிறார் தாஜ்நூர். முதல்வாய்ப்பு தாஜ்நூர் வழியாக அமைந்தாலும், அடுத்து பூ படத்தில்  எஸ்.எஸ்.குமரன் இசையமைப்பில் ஞானகரவேல் எழுதிய’சிவகாசியே ரதியே’பாடல் முதலில் வெளியாகி விட்டது. அடுத்து பூ, தூங்காநகரம், கிருமி, ஆண்டவன் கட்டளை என 35 படங்களில் 75க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். சூர்யா நடித்த காப்பான் படத்தில் ’சிறிக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி’என்ற பாடலை ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் எழுதியதும் ஞானகரவேல் தான். 

பாடலாசிரியராக இருந்த ஞானகரவேல் இப்போது பாடல்களுடன் வசனமும் எழுதி வருகிறார். லிபரா ப்ரடெக்சன்ஸ் தயாரிப்பில் காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் பாடல்களுடன் வசனகர்த்தாவும் இவரே. இந்தப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது 7 படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். இன்னும் சில படங்களுக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் ஞானகரவேல்.