Tamilnadu Local Body election : தி.நகர் இந்தி பிரசார சபா வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வந்து வாக்களித்தனர்...

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

திரைப்பிரபலங்களும் காலை முதலே வந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் இன்று காலை 7 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் வாக்களித்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் வந்து வாக்களித்தார்.

விஜயை தொடர்ந்து தியாகராயநகர் மண்டலத்திற்கு உட்பட்ட 117 வது வார்டில் இயக்குனர் டி.ராஜேந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது, ‘நாட்டில் இருக்கும் சூழலில் ஓட்டுப் போடலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓட்டு போடாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கூறியிருந்தார்...

இவர்களை தொடர்ந்து தற்போது தி.நகர் இந்தி பிரசார சபா வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வந்து வாக்களித்தனர்...