ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" என்ற படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள அந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், பரோட்டா சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தெறிக்கவிட்டனர். 

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் சோசியல் மீடியாவில் #HBDSuperstarRajinikanth,#HappyBirthdaySuperstar, #HBDThalaivarSuperstarRAJINI, #HappyBirthdayRajinikanth, #HBDRajiniKanth போன்ற  ஹேஷ்டேக்குகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகின. 

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையினர் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி தனது டுவிட்டர் பதிவில் முதலில் ரசிகர்களை குறிப்பிட்டுள்ளது, அவரது ஃபேன்ஸை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.