ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. உடனடியாக அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் சென்னை திரும்பினர். இருப்பினும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்நிலையில் கடந்த 25ம் தேதி திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 3 நாட்களாக ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட மருத்துவமனை, ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவரை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி இன்று முடிவு செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

 மேலும் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அவருடைய அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்திருந்தார். இதனிடையே ரஜினி நலம் பெற வேண்டி பவன் கல்யாண், கமல் ஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போனில் நலம் விசாரித்தனர். 

ரஜினிகாந்த் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மதியத்திற்கு மேல் தான் அவர் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து அறிவிக்கப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்திற்கு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று காலை தான் வந்துள்ளன. பரிசோதனை முடிவுகளில் அவருக்கு பயம்படி ஒன்றிமில்லை என கூறப்பட்டுள்ளது.  மேலும், மருத்துவர்கள் குழுவானது ரஜினியை மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பிற்பகலில் முடிவெடுப்பர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.