சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு மந்திரவாதி போல. அவருடன் பணியாற்றியபோது புத்தர் போதிமரத்தடியில் ஞானமடைந்தது போல் நானும் ஞானம் பெற்றேன், என்கிறார் ‘2.0’ படத்தின் இன்னொரு முக்கிய வில்லன் நடிகர் சுதன்ஷூ பாண்டே.

அஜீத்தின் ‘பில்லா 2’ அட்டர்ஃப்ளாப் படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானவர் சுதன்ஷூ. அப்படத்தின் தோல்வியால் அவருக்கு மீண்டும்  தமிழ்ப்படங்கள் சரிவர அமையாத நிலையில் ‘2.0’ படத்தில் டாக்டர் போராவின் மகனாக நடிக்கிறார். இந்த போரா ‘எந்திரன்’ படத்தில் ரஜினியின் குருவாக வந்தவர். குருவின் தொடர்ச்சியாக பார்ட்2 வில் குருவின் மகன் வருகிறார். 

‘இப்படத்துக்கு 6 மணி நேரம் வரை எனக்கு ஆடிஷன் செய்துவிட்டுத்தான் ஷங்கர் சார் என்னை இப்பாத்திரத்துக்கு செலக்ட் செய்தார். அஜீத்துடன் ‘பில்லா2’வுக்குப் பின், இப்படம் அதுவும் ரஜினியின் படம் கிடைத்திருப்பது எனக்குப் பெருமை. அவரிடம் ஒரு வசிய சக்தி இருக்கிறது. எனக்கு அவர் ஒரு புத்தர் போல. அவரால் எனக்கு புதிய ஞானமே கிடைத்திருக்கிறது. அவரைச் சந்தித்த பிறகு வாழ்க்கை குறித்த எனது கண்ணோட்டமே மாறிவிட்டது.

 

இதை யார் வேண்டுமானாலும் உணரமுடியும். அவரிடமுள்ள இரக்க குணத்தையும் அவர் கண்களில் உள்ள காந்த சக்தியையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை’ என்று, டிக்கெட் செலவில்லாமல், ரஜினியை இமயமலையின் உச்சியில் கொண்டுபோய் வைக்கிறார் சுதன்ஷூ. படப்பிடிப்பின் இறுதி நாளன்று சுதன்ஷூவை தனியே வரவழைத்த ரஜினி ’லிவிங் வித் த ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ என்ற புத்தகத்தை தனது கையெழுத்திட்டு அன்பளிப்பாகத் தந்தாராம்.