தமிழ் சினிமாவையே தனது சுண்டு விரலால் சுழற்றி விளையாடி வந்த கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனை அவரது வீட்டிலேயே குத்த வைத்து உட்கார வைத்ததுடன் உரித்து உப்புக் கண்டம் போட்டுள்ளார் ரஜினி.

பொதுவாக திரையுலகில் யாருடனும் மோதல் போக்கை கடைபிடிக்காதவர் ரஜினி. எதிர்முகாமில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிராக அரசியல், முதுகில் குத்தும் வேலைகள் தமிழ் சினிமாவில் ரொம்ப பிரபலம். ஆனால் இதுவரை ரஜினி எந்த நடிகருக்கு எதிராகவும் செயல்பட்டது இல்லை. ரஜினியால் தனது வாழ்க்கை போய்விட்டதாக இதுவரை எந்த நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறியதே இல்லை. மேலும் எந்த விஷயத்திலும் ரஜினி சமரத்திற்கே தயாராக இருக்க கூடியவர்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்பை திருப்பி கொடுத்தவர் ரஜினி தான். பாபா படம் பெரிய விலைக்கு விநியோகஸ்தர்களால் வாங்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் கேட்காமலேயே அவர்களை அழைத்து நஷ்டத் தொகையை திருப்பி கொடுத்தார் ரஜினி. காரணம் அந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி தான். இதே போல் குசேலன், லிங்கா படங்களுக்கான நஷ்டத்தையும் திருப்பி கொடுத்தவர் ரஜினி.

இந்த சூழலில் தான் தர்பார் படத்தில் தங்களுக்கு பெரும் நஷ்டம் என்று கூறி விநியோகஸ்தர்கள் சிலர் ரஜினி வீட்டிற்கு சென்றனர். இதனை கேட்டு ரஜினி முதலில் அதிர்ந்து போய்விட்டார். ஏனென்றால் பொங்கலுக்கு வேறு எந்த படமும் வெளியாகவில்லை. சுமார் பத்து நாட்கள் திரையரங்குகளில் தர்பார் படத்தை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை. மேலும் கமர்சியலாக படம் நன்றாக போவதாகத்தான் ரஜினிக்கு பீட் பேக் வந்திருந்தது. இந்த நிலையில விநியோகஸ்தர்கள் நஷ்டம் என்று வீட்டுக் கதவை தட்டியதால் ரஜினி அது குறித்து விசாரித்துள்ளார்.

வந்தவர்கள் பெரும்பாலும் தென்மாவட்டங்களை சேர்ந்த விநியோகஸ்தர்கள். பெரிய அளவில் இதுவரை அவர்கள் எந்த படத்தையும் விநியோகம் செய்தது இல்லை. இது குறித்து லைக்காவிடம் கேட்ட போது, மதுரை ஏரியாவை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும் தாங்கள் கொடுக்காமல் சின்ன சின்ன விநியோகஸ்தர்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் பதில் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மதுரை ஏரியா திரையரங்க உரிமையாளர்களை ரஜினி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது ஒன்பது நாட்கள் திரையரங்குகளில் மாலை காட்சி மற்றும் இரவுக் காட்சி ஹவுஸ் புல் என்று அவர்கள் தெரிவிக்க, பிறகு ஏன் விநியோகஸ்தர்கள் நஷ்டக்கணக்கு காட்டுகிறார்கள் என்று ரஜினி விசாரித்துள்ளார். அப்போது தான் இதன் பின்னணியில் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையை போல மதுரை திரையரங்குகளில் கணிணிமயமாக்கப்பட்ட டிக்கெட் கிடையாது. இதனால் படத்திற்கு ஹவுஸ் புல்லாக ரசிகர்கள் வந்தாலும் வரவில்லை என்று பொய் கணக்கு எழுதி நஷ்ட கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது.

மேலும் தர்பார் படத்தை விநியோகிக்கும் உரிமையை தனக்கு தரவில்லை என்பதால் அவர்களை பின்னால் இருந்து அன்புச் செழியன் தூண்டிவிடுவதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சி அன்புச் செழியனை இயக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொதித்துப்போன ரஜினி, தனது தொடர்புகள் மூலம் அன்புச் செழியனுக்கு தான் யார் என்று காட்டியுள்ளார்.

அன்புச் செழியன் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவை கட்டி ஆள்பவர். விஜய் படங்களுக்கு அதிக அளவில் பைனான்ஸ் செய்யக் கூடியவர். இவரிடம் பைனான்ஸ் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை. கொடுத்தத பணத்தை திருப்பி வாங்க இவர் பயன்படுத்தும் டெக்னிக்கால் மணிரத்னத்தின் சகோதரர் ஜிவி, நடிகர் சசிக்குமாரின் உறவினர் அசோக் போன்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் நடிகைகள் ரம்பா, தேவயாணி போன்றோரும் கூட படத்தயாரிப்புக்கு இவரிடம் பணம் வாங்கி படாதபாடு பட்டதாக சொல்வார்கள். விஷால், ஞானவேல் ராஜா என இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலும் நீளும்.

அதிலும் நான் கடவுள் படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தரவில்லை என்று அஜித்தை மதுரையில் ஒரு லாட்ஜில் வைத்து நாள் முழுவதும் அன்புச் செழியன் மிரட்டியது பகீர் ரகம். சொல்லப்போனால் அப்போது அஜித் அங்கு வைத்து அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. இப்படி இதுநாள் வரை யார் யாரிடமோ தனது செல்வாக்கை காட்டி வந்த அன்புச் செழியன் தான் மோதுவது பாறை இல்லை இமயமலை என்று தெரியாமல் ரஜினியிடம் மோதியுள்ளார்.

ஏற்கனவே ரஜினியை வைத்து தமிழக அரசியலை திருப்பி போடும் முயற்சியில் இருக்கும் டெல்லி லாபி, ரஜினி இமேஜை ஒரு சினிமா பைனான்சியர் டேமேஜ் பண்ண அனுமதிக்க கூடாது என்று தான் வருமான வரித்துறையை ஏவியுள்ளனர். அப்போது அதிகாரிகள் இதுநாள் வரை தனது வாடிக்கையாளர்களிடம் அன்புச் செழியன் நடந்து கொண்டதை போல அவரிடம் நடந்து கொண்டதாக சொல்கிறார்கள். சொல்லப்போனால் குத்த வைத்து விசாரணை நடத்தியதாக சொல்கிறார்கள். எது எப்படியோ இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இது நாள் வரை அன்புச் செழியனை சகித்துக் கொண்டிருந்த திரையுலகம் தற்போது அவர் வருமான வரித்துறையில் சிக்க காரணம் ரஜினி தான் என்பதை அறிந்து அவரை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.