ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படம், பொங்கல் விருந்தாக வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான "தர்பார்" படத்தின் பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. 

மிகப்பெரிய பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், புரோமோஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் "தர்பார்" படத்தின் போஸ்டர்கள் விமானத்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. ரஜினிகாந்தின் 167வது படமான இதற்கு சென்சாரில் U/A சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதால், "தர்பார்" படத்தின் மீதான எதிர்பாப்பு எக்கச்சமாக அதிகரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் படம் வெளியாக உள்ளது என்றாலே தலைவர் ஃபேன்ஸ் மாஸ் காட்டாமல் இருப்பார்களா?.  அதிலும் இந்த முறை "தர்பார்" ரிலீஸை விண்ணை தொடும் அளவிற்கு கொண்டாட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். 

அதற்காக சேலத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்கம் முன்பு விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி கேட்டு, ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் சேலம் வருவாய் கோட்டாட்சியர், மேற்கு வட்டாட்சியர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.