ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படம், பொங்கல் விருந்தாக வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான "தர்பார்" படத்தின் பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. 

மிகப்பெரிய பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், இந்தியா முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களிலும் பிரம்மாண்டமான முறையில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதால், "தர்பார்" படத்தின் மீதான எதிர்பாப்பு எக்கச்சமாக அதிகரித்துள்ளது. 

"தர்பார்" படத்தின் புரோமோஷனுக்காக லைகா நிறுவனம் காட்டும் தீவிரத்தை விட, பட ரிலீஸ் அன்று பட்டையைக் கிளப்ப சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தீர்மானித்துவிட்டனர். சேலத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி ப்ளக்ஸ் தியேட்டரில் உள்ள 5 திரையரங்குகளிலும் தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அங்கு வைக்கப்பட உள்ள சூப்பர் ஸ்டாரின் கட் அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ சேலம் மாவட்ட ஆட்சியர் உட்பட 6 துறைகளிடம் அனுமதி கோரப்பட்டது. 

சூப்பர் ஸ்டார் ரசிகரான கனகராஜ் என்பவரது நீண்ட முயற்சிக்கு பிறகு சேலம் கலெக்டர், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட 6 துறைகளும் அனுமதி கொடுத்துவிட்டனர். 5 லட்சம் ரூபாய் வாடகையில் பெங்களூருவில் உள்ள டாவன்கேர்சுகர் என்ற நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் ஆக உள்ள 9ம் தேதி காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட உள்ளது. 

கட் அவுட், பேனர், பால் அபிஷேகம், அன்னதானம், பட்டாசு, ஆட்டம் பாட்டம் என்று இருந்த ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்டே ஷோவை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் விண்ணளவிற்கு கொண்டு போய், வேற லெவலுக்கு தெறிக்கவிட்டுள்ளனர்.