பாதி ரசிகர்கள் உலக லெவல் என்று கொண்டாட, மீதி ரசிகர்கள் ’உவ்வே இவ்வளவு பச்சையாவா படம் எடுப்பாங்க?’ என்று கண்டனக்குரல் எழுப்ப சுமார் வசூலுடன் வெற்றியா, தோல்வியா என்று தீர்மானிக்கமுடியாத குழப்பத்தை ஏற்படுத்திய ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் சர்வதேச திரைப்பட விழா ஒன்றுக்குத் தேர்வாகியிருக்கிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனங்களை உருவாக்கியது. நல்ல எதிர்பார்ப்புடம் முதல்வார வசூல் சிறப்பாக இருந்த நிலையில் எதிர்கருத்துக்களால் பின்னர் வசூல் டல்லடித்தது.

இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதே சமயம் திருநங்கைகள் இப்படத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தன. மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருந்தனர். மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்தி பதிப்பையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்குகிறார். இந்தியில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது.