திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். 

இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 

80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில்,   இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். 

சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து சுஜித் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு ஃபாத்திமா புதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் காட்டுப்பட்டி கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் , கடந்த 4 நாட்களாக உணவு உறக்கம் இன்று உழைத்து களைத்துப போன அனைவருக்கும் நன்றி.

ஆனால் சுஜித் உன் உடலை குழிக்குள் இருந்து மீட்டுவிட்டோம்… நாங்கள் துயரக்குழிக்குள் வீழ்ந்துவிட்டோர் எங்களை யார் மீட்பது ? என தனது சோகத்தை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.