கன்னட நடிகை சாந்தனா, காதலன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட  நிலையில் தற்போது, தலைமறைவான இவருடைய காதலன் தினேஷ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 28 ஆம் தேதி, அன்று 29 வயதே ஆகும், நடிகை சாந்தனா, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடிக்கும் போது, வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருந்தார். அதில் தன்னுடைய இந்த முடிவுக்கு காரணம் தினேஷ் தான் என்றும், அவருக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என கண்ணீர் மல்க கூறியிருந்தார். 

நடிகை சாந்தனா தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட காதலன் தினேஷ் அன்றிலிருந்து தலைமறைவானார். எனினும் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது அதிரடியாக கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.  

தற்போதைய விசாரணையில்,  சந்தனாவின் குடும்பம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்திலிருந்து பெங்களூருக்கு வந்து ஆரம்பத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய துவங்கியுள்ளார். நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவர், ஆரம்பத்தில் சில விளம்பரங்களுக்காக வாய்ஸ் ஓவர் செய்யத் தொடங்கினார். பின்னர் இன்னும் வெளியிடப்படாத கன்னட திரைப்படமான 'காலாண்டு வாழ்க்கை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையாக மாறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாந்தனா தினேஷை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள், பின் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கணவன் மனைவி போல், தனி வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக, சாந்தனாவிடம் பழகிய தினேஷ் பின் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். 

நடிகை சாந்தனா அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியபோது அவரை தினேஷ் தவிர்க்க முயன்றார். பின்னர் சந்தனாவின் பெற்றோர்,  தினேஷின் பெற்றோரை அணுகியபோது, அவர்களை மோசமாக பேசி அவமானப்படுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான  சாந்தனா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இவருடைய தற்கொலை விஷயத்தில் போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், தினேஷுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என சந்தனாவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.