அதன் பின்னர், தனது லைகா புரொடக்ஷன் மூலம் பல படங்களை தயாரித்துள்ள அவர், விநியோகஸ்தராகவும் நிறைய படங்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான '2.0' படத்தை சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். 

தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'தர்பார்' படத்தையும் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் தான் தயாரித்துள்ளது. 

மேலும், 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தையும், மணிரத்னம் இயக்கத்தில் மிகபிரம்மாண்டமாக உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தையும் தயாரித்து வருகிறது. 


ஒருபக்கம் படங்களின் தயாரிப்புக்காக பணத்தை கொட்டிவரும் சுபாஸ்கரன், மறுபக்கம், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

இதற்கான பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், லைகா குழும தலைவரும், தயாரிப்பாளருமான சுபாஸ்கரன், இயக்குநர்கள் மணிரத்தன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய முருகதாஸ், கத்தி படத்தின்போது சுபாஸ்கரனை ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரியும் என்றும், ஆனால் லண்டனுக்கு சென்றபின்னர் அவரது பின்புலம் தெரியவந்ததாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், சுபாஸ்கரனுடன் சமீபத்தில் 4 நாட்கள் உடன் இருந்தபோது அவரது வாழ்க்கையை தன்னிடம் முழுவதுமாக சொன்னதாகவும், தாய்நாட்டில் இருந்து வெளியேறிய ஒருவன் ஒன்றுமே இல்லாமல் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த நிலைக்கு வந்துள்ளார் என்றும் புகழ்ந்து தள்ளினார். அத்துடன், சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆர்வமாக உள்ளதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் விருப்பம் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய இயக்குனர் மணிரத்னமும், தான் சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இதுபற்றி பேசிய முருகதாஸ், "மணி சார் முதல் பாகம் எடுக்கட்டும். நான் இரண்டாவது பாகம் எடுக்கிறேன். இருவருமே எடுக்கலாம்' என தெரிவித்தார்.

முன்னணி இயக்குநர்கள் இருவரின் படங்களையும் தயாரிப்பது சுபாஸ்கரனாக இருந்தாலும், அவரை பாராட்டுவதிலும், புகழ்வதிலும் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டது மட்டுமல்லாமல், தற்போது, அவரது வாழ்க்கை கதையை படமாக்கவும் இப்படியா இருவரும் போட்டிப்போடுவார்கள் என நிகழ்ச்சிக்கு வந்தவர்களையும், பத்திரிகையார்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.