தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய சினிமாக்களில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 1970, 80களில் ரஜினி, கமல், அமிதாப் பச்சன் ஆகிய உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தாலும் அவர்களை மிஞ்சி நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியவர்.

ரஜினியுடனும் கமலுடனும் இணைந்து அதிகமான படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். 1969ம் ஆண்டில் துணைவன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகிய நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1976ல் மூன்று முடிச்சு திரைப்படத்தில் ஸ்ரீதேவியை நாயகியாக அறிமுகப்படுத்தினார் கே.பாலசந்தர். இந்த படத்தில் ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 16 வயதினிலே, மூன்றாம் பிறை ஆகிய படங்களில் தனது முத்திரையை பதித்தார்.

1970, 80களில் பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகிய இயக்குநர்களின் பிரதான தேர்வாக இருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் நடிப்பு திறமையை காலம் கடந்து பறைசாற்றும் வகையில் அவர் ஏற்று நடித்திருந்த 10 கதாபாத்திரங்களை பார்ப்போம்..

1. மூன்று முடிச்சு - செல்வி

1969 முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த ஸ்ரீதேவி, 1976ல் இயக்குநர் கே.பாலசந்தரால் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தில் நாயகியாக நடிக்கும்போது அவரது வயது 13. அப்போதே செல்வி என்ற கதாபாத்திரத்தில் முத்திரை பதித்திருப்பார் ஸ்ரீதேவி.

2. 16 வயதினிலே - மயிலு

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் திரைப்படம். மீண்டும் ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து இந்த படத்தில் நடித்தார். மயிலு என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். மயிலு கதாபாத்திரம் தலைமுறை கடந்தும் ஸ்ரீதேவியின் நடிப்புத்திறமையை பறைசாற்றும்.

3. சிகப்பு ரோஜாக்கள் - சாரதா

16 வயதினிலே படத்திற்கு அடுத்து மீண்டும் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்த படம் சிகப்பு ரோஜாக்கள். சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி, கமலின் நடிப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் நடித்திருப்பார்.

4. பிரியா - பிரியா

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த படம் பிரியா. பிரியா என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து புனையப்பட்ட இந்த கதையில் பிரியாவாக ஸ்ரீதேவி வாழ்ந்திருந்தார்.

5. ஜானி - அர்ச்சனா

இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் அர்ச்சனா என்ற பாடகி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்தார். என் வானிலே ஓர் வெண்ணிலா, காற்றில் எந்தன் கீதம், ஓர் இனிய மனது இசையை சுமந்து செல்லும் ஆகிய வெற்றி பாடல்களுக்கு உயிர் கொடுத்தார் ஸ்ரீதேவி. என்றும் அழியாத இந்த பாடல்கள் ஸ்ரீதேவிக்கு பெருமை சேர்த்தன.

6. வறுமையின் நிறம் சிவப்பு - தேவி

மீண்டும் கே.பாலசந்தரின் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்த படம் வறுமையின் நிறம் சிவப்பு. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது.. திறந்த பார்க்க நேரமில்லடி என்ற பாட்டு இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்படும் பாடல். அந்த பாடலில் கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தினர். 

7. மூன்றாம் பிறை - பாக்யலட்சுமி

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் மனநலம் குன்றியவராக நடித்தார் என்று கூறுவதை விட அந்த கதாபாத்திரமாகவே படம் முழுதும் வாழ்ந்தார் என்றுதான் கூற வேண்டும். இயல்பான நடிப்பிற்கு பெயர்போன கமலையே மிஞ்சி நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு, நடிப்பின் உச்சம் என்றே சொல்லலாம்.

8. வாழ்வே மாயம் - தேவி

9. நான் அடிமை இல்லை - பிரியா

1986ம் ஆண்டு ரஜினியுடன் நடித்த இந்த படம் தான் தமிழில் கதாநாயகியாக நடித்த கடைசி படம். அதன்பிறகு இந்தி சினிமாவிற்கு சென்றுவிட்டார் ஸ்ரீதேவி.

10. இங்கிலீஷ் விங்கிலீஷ் 

திருமணத்திற்கு பின்னர், சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஸ்ரீதேவி, 15 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து, தான் இன்னும் சிறந்த நடிகைதான் என நிரூபித்த படம் இங்கிலீஷ் விங்கிலீஷ்.