sridevi across 50 years
நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனது முதல், அவர் கதாநாயகியாக நடித்த அணைத்து படங்களிலும் அவரை ரசிக்காத ரசிகர்களே இல்லை... இன்று வரை அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. 1967ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாள் 'துணைவன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் 'நம்நாடு', சிவாஜிகணேசனுடன் 'வசந்தமாளிகை' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதன் பின்னர் 1976ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக மாறினார்.
நாயகியான பின்னர் அவர் கொடுத்த வெற்றி படங்கள் கணக்கிலடங்காது. கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே ராசியான ஜோடியாக வலம் வந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவரவுள்ள 'மாம்' திரைப்படம் அவரது 300வது படம் ஆகும். இந்த படத்தை அவர் அறிமுகமான முதல் படம் வெளியான அதே ஜூலை 7ஆம் தேதி வெளியிட ஸ்ரீதேவியின் கணவரும் 'மாம்' படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் நான்கு மொழிகளுக்கும் அவரே டப்பிங் குரல் கொடுக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
ரவி உத்யவார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்
