கருத்து வேறுபாடுகள் களைந்து மீண்டும் கட்டித் தழுவிக்கொண்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் இசைஞானி இளையராஜா இசையில் ‘தமிழரசன்’படத்துக்காகப் பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அந்த சிறப்பான சம்பவம் சற்றுமுன்னர் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தேறியது.

2017ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குழுவினருக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் பாடல்கள் காப்பீடு தொடர்பாக ஒரு நோட்டீஸ் அன்ப்பியிருந்தார். அதை சரிவரப்புரிந்துகொள்ளாத எஸ்.பி.பி. ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு பாடலில் பாடகனுக்கு எந்த உரிமையும் இல்லையா? என்று கேள்வி எழுப்ப இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

அடுத்து ஊடகங்கள் மேலும் மேலும் கொளுத்திப்போட்ட நிலையில் ராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் முறிந்து ஒருவரை சந்திக்காமலே இருந்தனர். இந்நிலையில் ராஜாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு சில புண்ணியவான்கள் மேற்கொண்ட முயற்சியால் இருவரும் சந்தித்து ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே’என்று கட்டித்தழுவிக்கொள்ள ‘இளையராஜா 76’ நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பாடுவது உறுதி செய்யப்பட்டது.

அந்த நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள அதற்கு முந்தைய நாளே தனது நண்பன் எஸ்.பி.பிக்கு ஒரு சர்பரைஸ் கொடுக்க நினைத்த ராஜா, விபரம் எதையும் தெரிவிக்காமல், ’காலை 7 மணிக்கு ஒழுங்கு மரியாதையா என் ஸ்டுடியோவுக்கு வந்து சேர்’ என்று மிரட்டல் அழைப்பு விடுத்திருந்தார். ராஜா அழைக்கிறார். தட்ட முடியுமா? வந்து சேர்ந்த எஸ்.பி.பிக்கு கவிஞர் பழனிபாரதியின் பாடல் ஒன்று கொடுக்கப்பட ராஜா அழைத்து டியூனை கொடுக்க, மிகவும் நெகிழ்ந்துபோய் அப்பாடலைப் பாடியிருக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்து வரும் இப்படம் ஆகஸ்டில் ரிலீஸாகிறது.