சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, அண்ணாத்தை படத்தில் பாடியுள்ள தகவலை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக மகன் சரண் அறிவித்துள்ளார். பாடும் நிலா பாலு எப்படியாவது எழுந்து வந்துவிட்டார் என பிரார்த்தனை செய்து வந்த ரசிகர்களும், திரையுலகினரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து, தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர், இமான் தன்னுடைய இசையில் கடைசியாக எஸ்.பி.பி அண்ணாத்தை படத்திற்கு பாடல் பாடியுள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது.. அனைவருக்கும் வணக்கம், எஸ்.பி.பி அவர்களின் மறைவு இன்று எத்தனையோ இசை ரசிகர்களுக்கு ஏமாற்றம், பெரிய வலியை கொடுத்துள்ளது. எத்தனையோ ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். எத்தனையோ இரவுகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். 

என்னுடைய இசை பயணத்தில் சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையில் சரி அவருடன் பணியாற்றும் சில வாய்ப்புகள் தனக்கு கிடைத்தது. அப்படி ஒரு பாடல் தான் 'ஜில்லா' திரைப்படத்தில் , பாட்டு ஒன்று கட்டு கட்டு தோழா என துவங்கும் பாடல். அதில் எஸ்.பி.பி மற்றும் ஷங்கர் மஹாதேவன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் 'அண்ணாத்தை' படத்தின் ஆரம்ப பாடலை எஸ்.பி.பி தன்னுடைய இசையில் பாடியுள்ளார். அவருடைய கடைசி பாடல் சூப்பர் ஸ்டாருக்காக என்னுடைய இசையில் அமைந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் ஆசீர்வாதமாக உணர்கிறேன். அதனை விவரிக்கவும் வார்த்தைகள் இல்லை. மிகவும் அன்பானவர், அருமையானவர் அவருக்கு ஈடு இணையே இல்லை ஐ மிஸ் யு எஸ்.பி.பி சார் என தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.