கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாடகர் மனோ கண்ணீர் விட்டு கதறி அழுதது மனதை உலுக்கும் விதமாக அமைந்தது. சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த காத்திருக்கின்றனர். காலை 10 மணி வரை உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன் பின்னர் இறுதிச்சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12 மணி அளவில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.