இந்தி நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான சத்ருஹன் சின்ஹாவின் மகளான பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா உள்ளிட்ட நடிகைகள் ரூ.32 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

டெல்லியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த, ‘இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பாலிவுட் நடிகைகள் சோனாக்‌ஷி சின்கா, மால்விகா பஞ்சாபி, துமில் தாக்கர், எட்கர் சகாரியா ஆகியோருக்கு ஒரு கம்பெனி ரூ.37 லட்சம் பணம் கொடுத்தது. அவருக்கு நான்கு தவணைகளில் பணம் வழங்கப்பட்டது. பணத்தை வாங்கிக் கொண்டு அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆகையால், அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. 

அதனால் பணத்தைத் திருப்பித் தருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் பணத்தைத் திருப்பித் தர மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சோனாக்‌ஷி உள்ளிட்ட நடிகைகள் மீது கடந்த பிப்ரவரியில், உ.பி. போலீசில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் புகார் அளித்தார். அதன்படி, நடிகைகள் சோனாக்ஷி, மாளவிகா பஞ்சாபி, துமில் தக்கர், எட்கர் சகாரியா, அபிஷேக் சின்ஹா ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அதன் பின்பும் சோனாக்‌ஷி சின்காவிடம் இருந்து எந்த பதிலும் வராததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பணம் கொடுத்த நிறுவனத்தின் உரிமையாளர், உபி. போலீசாரிடம் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, உபி போலீசார் மும்பையில் உள்ள சோனாக்‌ஷி வீட்டுக்கு நேற்று முன்தினம் விசாரணை நடத்த சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. இந்த புகார் தொடர்பாக சோனாக்‌ஷியின் வழக்கறிஞர் பதில் மனு அளித்துள்ளார். அதை படித்த பின்பு, அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், டிவிட்டரில் சோனாக்‌ஷி வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர், வாக்குறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் எனது புகழை கெடுக்க நினைக்கிறார்,’ என கூறியுள்ளார்.