இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களுக்கு டிஸ்கஷனுக்கு அமர்கிறபோது நல்ல சீன்களுக்குப் பதில் ஏழெட்டு சர்ச்சைகளைத் தான் முதலில் தேடி எடுத்துக்கொள்கிறார்களோ என்று சந்தேகப்படுகிற அளவுக்கு ஒவ்வொரு படமும் வரிசையாக சர்ச்சைகளுடனேயே களம் இறங்குகின்றன.

கடந்த வாரம் ரிலீஸான ஜெயம் ரவியின் ‘கோமாளி’படம் சரமாரியான சர்ச்சைகளைச் சந்தித்துவரும் நிலையில் அடுத்து வெளியாக உள்ள காமெடி நடிகர் யோகி பாபுவின் ‘பப்பி’என்ற படம் ஒரு விநோதமான சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. பப்பு படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்தப் போஸ்டர்தான் இப்போது பிரச்சினையாகியுள்ளது. அந்த போஸ்டரில் என்ன சர்ச்சை? 

 சிவசேனா அமைப்பை சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள  புகாரில் இருக்கிறது அதற்கான பதில். அவர் அளித்துள்ள புகாரில்,அமெரிக்காவில் முழு நீல நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரையும், இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து பப்பி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒருவேளை ஒரிஜினல் புகாரா அல்லது படக்குழுவினரின் விளம்பர செட் அப்பா என்கிற குழப்பமும் இருக்கவே செய்கிறது.