தன் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்றால் காபி குடிக்கக் கூடாது என உபதேசம் செய்யும் சிவக்குமார், காபி விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என தன் மகன்களுக்கு  அட்வைஸ் செய்வாரா என எஸ்.வி.சேகர்  கேள்வி எழுப்பி உள்ளார். 

சமீபத்தில் நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் சார்பில், ஏழை எளிய மாணவர்களுக்கு நிதி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய சூர்யா, புதிய கல்வி கொள்கை கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்றும், சுமார் 30 கோடி மாணவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் புதிய கல்வி கொள்கையை நடைமுறைபடுத்துவதில் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.  இது தொடர்பாக, சூர்யாவின் கருத்துக்கு தனியார் ஊடகத்தின் வாயிலாக பதில் அளித்துள்ள நடிகர் எஸ்.வி சேகர் புதிய கல்வி கொள்கை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் சூர்யா போன்ற நடிகர்கள் கருத்துச் சொல்லவது அபத்தம் என்றார்.

முப்பது கோடி மாணவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புதிய கல்வி கொள்கையை நடைமுறைபடுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது. என சூர்யா சொல்வதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை  என்றும் சூர்யா வேண்டுமானால் 2 ஆண்டுக்கு ஒருமுறை நிதானமாக படமெடுத்துக் கொள்ளட்டும் அதை யாரும் கேட்கப் போவதில்லை என்று விமர்சித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை நிதானமாக கொண்டுவரலாம் என்று சொல்வதற்கு சூர்யாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார். வேண்டுமென்றால் சூர்யா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு வந்து  அவர் பேசட்டும் என்றும் காட்டமாக பேசினார் எஸ்.வி.சேகர்.  சூர்யாவின் கருத்துக்களுக்கு கமலஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளாரே,  என்று அப்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, கமலஹாசன் கருத்தையே மக்கள் ஏற்பதில்லை, கமலஹாசனையும் ஏற்பதில்லை, அப்படியிருக்க அவர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தால் என்ன தெரிவிக்காவிட்டால் என்ன என கூறி கமலஹாசனையும் வறுத்தெடுத்தார். 

மூன்று வயது குழந்தைகளுக்கு மும்மொழிக்கொள்கை தேவையா என்று சூர்யாவின் மற்றொரு கருத்துக்கும் பதிலடி கொடுத்துள்ள எஸ்வி சேகர், நம்மைவிட குழந்தைகளுக்கு கற்கும் திறன் அதிகம் என்பதால் அவர்கள் படிப்பதற்கு வழி சொல்ல வேண்டுமே தவிர அந்த வழிகளை அடைக்க கூடாது என்றார். கழைக் கூத்தாடிகளின் குழந்தைகள் கூட கயிற்றின் மீது ஏறி அந்தரத்தில்  சாகசம் செய்யும் போது குழந்தைகளுக்கு படிப்பு வராதா என சூர்யாவுக்கு கேள்வி எழுப்பினார்.

நடிகர் சிவக்குமார் கூட தன் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்றால் காபி குடுக்க கூடாது என பேசி வருகிறார் எனவும், அவர் வேண்டுமானால் காபி விளம்பரத்தில் நடிக்கும் தன் மகன்களை நடிக்கக் கூடாது என தடைபோடுவாரா என்று கேள்வி எழுப்பிய எஸ். வி சேகர் ஊருக்கு தான் உபதேசம் என்றும் கடிந்து கொண்டார்.