’இயக்குநர் எம்.ராஜேஷின் படங்களில் காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் வருவார் என்பதால் அவர் ‘மிஸ்டர் லோக்கல் படத்தில் இல்லாத குறையைப்போக்க ஓவர் டைம் எடுத்து உழைக்க வேண்டியிருந்தது’ என்கிறார் மிஸ்டர் யதார்த்தம் சிவகார்த்திகேயன்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா  ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’.இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான முதல் படமான ‘ஒரு கல்  ஒரு கண்ணாடி தொடங்கி  அனைத்து படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிகர் சந்தானம் நடித்திருப்பார். அவரது காமெடிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்.

ஆனால் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வருவதால் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. எனவே அவர் ’மிஸ்டர் லோக்கல்’ படத்தில் இடம்பெறவில்லை.’மிஸ்டர் லோக்கல்’ படத்தில் சந்தானம் இடம்பெறாதது குறித்துப் பேட்டியளித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ‘சந்தானம் இல்லாத குறையைப் போக்க அதிகம் மெனக்கெட்டுள்ளோம். இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் ஓவர்டைம் போட்டு உழைக்க வேண்டியிருந்தது. யோகி பாபு, நடிகர் சதீஷ், ரோபோ சங்கர் மூவருமே நல்ல திறமைசாலிகள். மக்களிடையே வரவேற்பைப் பெற கடுமையாக உழைத்தவர்கள். எனக்கும் நகைச்சுவை வரும் என்பதால் இயக்குநர் ராஜேஷ் பெரும்பாலான காட்சிகளில் ரோபோ சங்கர், யோகி பாபு, நடிகர் சதீஷ் ஆகிய மூவரும் இடம்பெறுமாறு காட்சிகளை அமைத்துள்ளார்’என்கிறார்.