"நம்ம வீட்டு பிள்ளை" படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் "ஹீரோ". 'இரும்புத்திரை' இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள "ஹீரோ" படத்தின் விளம்பரம் மாஸ் காட்டி வருகிறது. சத்யம் தியேட்டரில் வான் உயர்ந்த கட்-அவுட், வாட்ஸ் அப் ஸ்டிக்கர், ரயில் முழுவதும் போஸ்டர் என வேற லெவலில் புரோமோஷன் செய்யப்பட்டு வருகிறது சிவகார்த்திகேயனின் "ஹீரோ" திரைப்படம். 

இதனிடையே இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் "ஹீரோ" படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் மித்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சத்யம் திரையரங்கில் "ஹீரோ" படத்தின் மாஸ்க் மற்றும் சிவகார்த்திகேயன் பயன்படுத்தும் 'எச்' சிம்பிள் ஆகியவை பிரம்மாண்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 

இதற்கு முன்னதாக "ஹீரோ" படத்தின் புரோமோஷனுக்காக PlayHero என்ற போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஏராளமான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பங்கேற்றனர். அந்த வீடியோ கேமில் ஜெயித்த ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் என்பவர் தான் "ஹீரோ" படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

மேலும் அந்த போட்டியில் பங்கேற்று அதிக ஸ்கோர்களை குவித்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.இந்த விழாவிற்கு செம்ம கூல் லுக்கில் வந்த சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ஹீரோ ட்ரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு, #HeroTrailerLaunch என்ற ஹேஷ்டேக்கை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்தியாவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.  

"ஹீரோ" பட ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் பேசிய கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸின் ராஜேஷ், தல அஜித்தின் ரசிகர்களுக்கு எப்படி "விஸ்வாசம்" படத்தை கொடுத்தேனோ, அதேபோல சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு "ஹீரோ" படம் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் படம் ரிலீஸ் ஆன 10 நாட்களுக்குப் பிறகு வசூல் குறித்து அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இப்படத்தை டிசம்பர் 20ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.