நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் புராணங்களிலிருந்து உதாரணங்கள் சொல்லுவதை விட்டு விட்டு வரலாற்று உண்மைகளையும் கொஞ்சம் தெரிந்துகொண்டு பேச ஆரம்பிக்க வேண்டும் என சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் சூப்பர் ஸ்டாரைக் கிண்டலடித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,’பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க., தொடர்ந்து மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க மறுத்து வருகிறது. எந்த மரபையும் கடைபிடிக்காமல் நிலை குழுக்களை அமைக்காமல் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மசோதாக்களை தாக்கல் செய்து அதை அமல்படுத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் பா.ஜ.க., எதிர்ப்பு நிலையை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. மற்ற கட்சிகள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றன.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க.வை மட்டுமே பாராளுமன்றத்தில் விமர்சித்திருக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு காங்கிரஸ் கட்சி குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது அவர் தனது எதிர்ப்பு நிலையை மாற்றி கொண்டுள்ளார். இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது.

காஷ்மீர் விவகாரத்தில் மோடி-அமித்ஷாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு உதாரணமாக புராண கதைகளை கூறியுள்ளார். இந்தியாவின் முந்தைய வரலாற்றை அவர் படித்திருந்தால் இது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கமாட்டார்.புராணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் வரலாற்றுக்கும் வழங்க வேண்டும். காவிரி- குண்டாறு -வைகை இணைப்பு திட்டத்துக்காக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் இணைப்புக்கு பின்னரே காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.என் தந்தை ப.சிதம்பரத்தின் செய்தி தொடர்பாளராக நான் பணியாற்றவில்லை. அவரது தகுதியை அடிப்படையாக கொண்டு என்னை யாரும் எடைபோட மாட்டார்கள். எனது செயல்பாடுகள்தான் எனது தகுதியை நிர்ணயிக்கும். அவருடைய நிலையும், எனது நிலையும் வெவ்வேறானது.