பேட்ட படத்தின் தாறுமாறு ஹிட்டினால் படா சந்தோஷத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்குக்கு ரெடியாகிறார்! என்று பார்த்தால் மனிதர் ஒரு சின்ன கேப்பினுள் மகளின் ‘மறுமணத்தை’ நடத்திப் பார்த்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டார். 

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு சில வருடங்களுக்கு முன் அஸ்வின் என்பவருடன் காதல் உருவாகி அது இரு விட்டு சம்மதத்துடன் கல்யாணத்தில் முடிந்தது. மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை விட மிக மெகாவாக நடந்த திருமணம் அது. ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் செளந்தர்யா - அஸ்வினுக்குள் மனக்கசப்பு. பிரிந்து விவகாரத்தும் ஆகிவிட்டது. 

அஸ்வினுக்கு மறுமணமாகிவிட்ட நிலையில், செளந்தர்யாவுக்கு விசாகன் என்பவருடன் காதல். தமிழகத்தின் மிகப்பெரிய ஆங்கில மருந்து கம்பெனி ஒன்றின் உரிமையாளரான விசாகனும் விவாகரத்து ஆனவர்தான். செளந்தர்யா தன் அப்பாவிடம் விசாகனைப் பற்றி சொல்ல, ரஜினி விசாரித்தபோது விசாகனின் அப்பாவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் என்பதும், இறந்த மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடியின் தம்பிதான் அவர் என்பதும் தெரிய வந்தது. 

சூலூருக்கு மிக அருகில்தான் நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் இருக்கிறது. எனவே சிவகுமாரிடம் ரஜினி விஷயத்தை சொல்ல, அவர் பக்காவாக விசாரித்து இரு குடும்பத்துக்கும் இடையில்  பல விஷயங்களை பேசிவிட்டு பச்சை கொடி காட்டினார். விளைவு, இதோ வரும் 11-ம் தேதி திருமணம். திருமணம் ஒரு நாள்தான். ஆனால் கோலாகலமோ மூன்று நாட்களாம். ரஜினி வீட்டு திருமணம் பற்றிய செம்ம டீடெயில்ஸை வி.ஐ.பி. நண்பர் ஒருவர் நம் ஏஸியாநெட் தமிழ் இணையதளத்துக்காக பகிர, இதோ அந்த விவரிப்பு...

* திருமணம் திங்கட் கிழமை. ஆனால் முதல் நாள் ஞாயிறு மதியம் 3 மணியிலிருந்து ஆரம்பிக்கிறது கோலாகலம்.   3 மணி முதல் இரவு வரை போயஸ்கார்டன் இல்லத்தில் ஜானவாசம் நடக்கிறது. (இது ரஜினியின் மனைவி லதா குடும்ப ஸ்டைல் நிகழ்வு)

* ஜானவாசத்தின் ஒரு அங்கமாக ‘மெஹந்தி’ பங்ஷன் போல் ஒன்று நடக்கிறதாம். அது சமீபத்தில் அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி கவனித்த ஒரு கலகலப்பு. சொந்தபந்தங்கள் அத்தனை பேரும் ஒன்றாய் அமர்ந்து நடத்தும் வைபவம். இந்த சமயத்தில் ஆட்டம், பாடல் என்று அமர்க்களப்படும். இந்த நிகழ்வுக்காக ஐஸ்வர்யா போட்டியிருக்கும் ப்ரோக்ராம் படி ரஜினி பாட, அதற்கு தனுஷ் ஆட இருக்கிறார்.

* மறுநாள் காலை சென்னை ஆர்.ஏ.புரம் லீலா பேலஸ் ஹோட்டலில் காலை 9 மணி முதல் 10:30 வரை முகூர்த்தம். அரை மணி நேரத்தில் வரவேற்பு. இதில் அரசியல் மற்றும் சினிமா நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். 

* இதற்கடுத்து மூன்றாம் நாள் செவ்வாய் கிழமை மாலையில் ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டில் ரிசப்ஷன் நடக்கிறது. இதில் ரஜினியின் பல வகை நட்பு வட்டார நபர்கள் கலந்து கொள்கிறார்களாம். ஆக மொத்தத்தில் தன் அரசியல் தயாரிப்புகளுக்கு லீவுவிட்டு விட்டு முழு மூச்சாக மகளின் கல்யாண ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார் ரஜினி. ’மறுமணம் தானே அதனால் சிம்பிளாய் பண்ணலாம்!’ என்று குடும்பத்தில் மிக முக்கியமான  யாரோ சொல்ல, அதற்கு ‘செளந்தர்யாவோட முதல் திருமணத்தை ரொம்ப ஆசை ஆசையா நடத்தினாரு. ஆனா அது நிலைக்கலை. அவருக்குள்ளே பெரிய ஆதங்கமும், வருத்தமும் இருக்குது. அந்த வேகத்துலதான் இதை கிராண்டா பண்றார். இந்த  மூணு நாள் சந்தோஷத்துல செளந்தர்யா மேலே அவருக்கு இருக்கிற கவலைகள் அடியோட போகட்டும்.’ கண்கள் கலங்க  பதில் சொல்லியிருக்கிறார் லதா.