'’மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கோரவும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன்’ என்கிறார் பாடகர் கார்த்திக்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி ‘மி டு’ சர்ச்சையை எழுப்பியபோது அதில் பாடகர் கார்த்திக்கின் பெயரும் பலமாக அடிபட்டது. பல பாடகிகளிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாகவும், வெளிநாட்டு நிகழ்ச்சிகளின்போது பல பாடகிகளை படுக்கைக்கு அழைத்ததாகவும்  செய்திகள் பரவின.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பாவமன்னிப்பு கோருவது போல் நீண்ட பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் அவர்..."புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலில் உயிர் துறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை முதலில் பதிவு செய்கிறேன். தேச மக்களோடு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நீண்ட அறிக்கையின் வாயிலாக கடந்த சில மாதங்களாக என்னை சோதித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் குறித்துப் பேச விரும்புகிறேன். என்னைச் சுற்றி எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைய விரும்புகிறேன்.  என்னைச் சுற்றிய உலகம் எப்போதுமே மகிழ்ச்சியைப் பரப்புவதாக இருக்க வேண்டும் என விரும்புவேன். என்னைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதன் காரணமாகவே, இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

சமீபகாலமாக ட்விட்டரில் என்னைப் பற்றி அநாமதேய புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் எனது மனசாட்சிக்கு உண்மையாகவே இருக்கிறேன். நான் இதுவரை எந்த ஒரு நபரையும் மனம் நோகும்படி செய்ததில்லை. யாரையும் அவர்களது எதிர்ப்பைக் கடந்து தொல்லை செய்தது இல்லை. நான் வேண்டுமென்றே யாரையும் அசவுகரியமாக உணரவோ அல்லது பாதுகாப்பற்று உணரவோ செய்ததில்லை. கடந்த காலங்களில் எனது செய்கையால் யாராவது வருந்தியிருந்தால் தயை கூர்ந்து அவர்கள் என்னை நேரடியாக அணுகுமாறு வேண்டுகிறேன். எனது தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கோரவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன். யாருடைய வாழ்க்கையிலும் என்னால் கசப்புணர்வு இருக்கக் கூடாது.

கடந்த சில மாதங்களாக எனது தந்தை மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார். அவரது உடல்நலன் தேற எனது நண்பர்களும் நலன் விரும்பிகளும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன்.நான் ஒப்பந்தமாகியிருந்த இசை நிகழ்ச்சிகள், பாடல்கள் குறித்த தகவல்கள் எல்லாவற்றையும் விரைவில் இங்கு அப்டேட் செய்கிறேன்.

இறுதியாக எனது இசைக்கும், என் குடும்பத்தினருக்கும் எனது மனைவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடினமான நாட்களில் அவர்கள் துணை நின்றதற்காக நன்றி. எனது விசிறிகளுக்கும், சினிமா நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக என்னைப் படைத்த இறைவனுக்கும் நன்றி. என் மீது தொடர்ந்து அன்பையும் ஆசிர்வாதத்தையும் பொழியும் இறைவனுக்கு நன்றி.

நான் அன்பின் ஒளியாகவும், ஊக்க சக்தியாகவும் இருக்க விரும்புகிறேன். என்னைச் சுற்றிய உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.இசை எல்லாக் காயங்களுக்கும் மருந்தாகட்டும். நன்றி. இறை ஆசி உண்டாகட்டும்’உங்கள் கார்த்தி"என்று அவர் பதிவிட்டுள்ளார்.