இரண்டு தினங்களுக்கு முன்பே ரிசர்வேசன் துவங்கியிருந்த நிலையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி காம்பினேஷனின் ‘சிந்துபாத்’ படம் இன்று ரிலீஸாகவில்லை. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி’பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக நடித்திருக்கும் படம் ‘சிந்துபாத்’. இப்படத்தில் அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வி.சே.வின் மகன் சூர்யாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபைனான்ஸ் பிரச்சினைகள் சுமார் இரு மாதங்களுக்கு முன்பே ரிலீஸாகவேண்டிய இப்படம் தள்ளிக்கொண்டே போனது. ஒரு வழியாக இன்று 21ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு தடபுடல் விளம்பரங்களும் செய்யப்பட்டு வந்த நிலையில் கடைசிநேர முட்டுக்கட்டைகளால் படம் திரைக்கு வரவில்லை.

 பாகுபலி படத்தை தமிழகத்தில் வெளியிட்ட வகையில் சிந்துபாத் தயாரிப்பாளர் ராஜராஜன் சுமார் 18 கோடியை அந்த நிறுவனத்திற்கு தர வேண்டுமாம். அந்த பணத்தை கொடுக்காமல் இந்தப்படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவோடு வந்து படத்தை நிறுத்திவிட்டார் பாகுபலி தயாரிப்பாளர்.நேற்று நள்ளிரவு வரை நடந்த பஞ்சாயத்து எவ்வித முடிவுக்கும் வராமல் முடிந்ததை அடுத்து சிந்துபாத் இன்று வெளியாகாது. இத்தனைக்கும் ராஜ ராஜன் தனது தயாரிப்பில் உருவாகி வரும் இரண்டு படங்களையும் இந்த பதினெட்டு கோடிக்கு ஈடாக கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
இது போக, சிந்துபாத் படத்தை ராஜராஜனிடம் வாங்கி வெளியிடுவதாக இருந்த கிளாப் போர்டு சத்யா என்பவர் தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து சுமார் ஆறரை கோடி முன் பணம் வாங்கியிருக்கிறாராம். பணம் கொடுத்தவர்கள் பதறிப் போய் நிற்கிறார்கள்.

வழக்கமாக தன் பட ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளருக்கு ஃபைனான்ஸ் பிரச்சினை இருந்தால் பெருந்தன்மையுடன் கையெழுத்துப்போட்டு மேலும் மேலும் கடனாளியாகி வந்த விஜய் சேதுபதி இப்பட பிரச்சினையில் தலையிட விரும்பாமல் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டாராம்..