தடம் படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு நடிகர் அருண்விஜய், அக்னி சிறகுகள், பாக்ஸர், மாஃபியா என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இதில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

திட்டமிட்டபடி பாக்ஸர் படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாத காரணத்தால், அந்தப்படம் பாதியில் நிற்கிறது.  இதனால், நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலனுடன் அருண் விஜய் கூட்டணி சேர்ந்தார். 

இந்தப் படத்தின்  படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கியது. ஹீரோயினாக பல்லக் லால் வாணி நடிக்கிறார். இதில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். 

அருண் விஜய்யின் 30-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சினம்' என தலைப்பு வைக்கப்பட்டிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை, நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்தப் படத்தை மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் விஜயகுமார் தயாரித்து வருகிறார். ஷபீர் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சினம் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.