சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாகியுள்ளது. கிட்டதட்ட தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே ஷெட்டியூலில் 32 நாட்களில் ஈஸ்வரன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட சிம்பு, தற்போது மாநாடு பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் இந்த படத்தில் இருந்து இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதில் இஸ்லாமிய இளைஞரான சிம்புவின் நெற்றில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து ரத்தம் சொட்ட, சொட்ட தொழுகை செய்யும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. 

படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கல் அன்றும், நடிகர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ஆம் தேதி டீசரை வெளியிட உள்ளதாகவும் மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள சுரேஷ் காமாட்சி, ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு மாநாடு படத்தை திரையிட உள்ளதாக தகவல் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு சிம்பு ஃபேன்ஸை செம்ம குஷியாக்கியுள்ளது.