அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்திற்குப் பின்னர் நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். அண்மையில் வெளியாகி வசூலைக் குவித்து வரும் இப்படத்தில் எத்தி என்ற கதாப்பாத்தில் சிம்பு நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் திரையரங்குகளில் விசில் சத்தமும், கைதட்டல்களும் காதைக் கிழிக்கின்றன. சிம்பு பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

  இந்த வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, காமெடி இயக்குனர் சுந்தர் சியுடன் இணைந்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா ஆகியோர் நடித்து 2013ல் வெளியாகி ஹிட்டடித்த அட்டரிண்டிக்கி தரேடி என்ற படத்தை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்கிறார். தனது தாத்தாவை விட்டுப் பிரிந்து போன அத்தையையும், அவரது குடும்பத்தையும் மீண்டும் தாத்தாவுடன் சேர்த்து வைக்கும் பாசமுள்ள பேரனாக இப்படத்தில் பவன் கல்யாண் நடித்திருப்பார். இவரது கதாப்பாத்திரத்தில் தமிழில் சிம்பு நடிக்கிறார். 

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் மேகே ஆகாஷ், கேத்ரீன் தெரெசா, என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிம்புவின் ஆஸ்தான இசை அமைப்பாளரும், நண்பருமான யுவன் சங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

செக்கச் சிவந்த வானம் வெளியானதை முன்னிட்டு ஜார்ஜியாவில் முதற்கட்டப் படிப்பிடிப்பை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பிய சிம்பு, ஐதராபாத்தில் நடைபெறும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் சிம்பு நடித்துக் கொடுக்கவுள்ளார்.