பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்களே பாக்கி இருக்கிறது. இந்நிலையில் சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் சென்றாயன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட இவர் எலிமினேட் ஆகி இருப்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்திருக்கிறது. இதனால் பிக் பாஸில் கூட ’நம்ம அரசியலில் நடப்பது போல ஆள் வைத்து கள்ள ஓட்டு போடறாங்க போல’ என கலாய்த்து வருகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ். 

இதில் பிக் பாஸ் ரசிகர்களின் கடுப்பு என்னவென்றால் அவர்கள் அதிகம் எதிர்பார்த்த ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறாதது தான். தொடர்ந்து அவரை மட்டும் பிக் பாஸ் காப்பாற்றி வருகிறார் என்பதால் பிக் பாஸ் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது முற்றிலும் குறைந்துவிட்டது. இது ஒரு பக்கம் இருக்க சென்றாயனின் எலிமினேஷன் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களுக்கும் கூட வருத்தத்தையே அளித்திருக்கிறது.

மூடர் கூடம் படத்தின் மூலம் தான் சென்றாயனின் பெயர் அதிகம் பிரபலமானது. அந்த படத்தின் இயக்குனர் நவீன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூட “பிக் பாஸ் எனும் மூடர் கூடத்தில் இருந்து வெளியே வந்திருக்கும் நண்பன் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்திருந்தார். இதில் அவர் சென்றாயனை வாழ்த்தி இருப்பது சிறப்பு. அதே சமயம் பிக் பாஸ் வீட்டை மூடர் கூடம் என்றது தான் மேலும் சிறப்பு. 

அதே போல பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கும் சென்றாயனை நேரில் அழைத்து வாழ்த்தி பரிசு கொடுத்திருக்கிறார் சிம்பு. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மகத். சிம்புவின் நெருங்கிய நண்பனான மகத் இந்த நிகழ்வின் போது உடன் இருந்ததால் அதனை மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த டிவிட்டர் பதிவில் சிம்பு சென்றாயனுக்கு ”திருமந்திரம்” புத்தகத்தை பரிசளித்திருக்கிறார். பிக் பாஸின் திருவிளையாடலில் இருந்து தப்பி வந்திருக்கும் சென்றாயனுக்கு, திருமந்திரம் நல்ல பரிசு தான்.